நெடுந்தீவு மாவிலி துறைமுக பாலத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வடதாரகை, நெடுந்தாரகை ஆகிய படகுகளை பாதுகாப்பாக கட்டி வைப்பதற்கான கட்டுகள் உடைந்து பாவிக்க முடியாத நிலையில் உள்ளதால் படகுகளை கட்டுவதில் பணியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகினறனர்.

இதேவேளை இந்நிலைமை காரணமாக படகு கட்டும் கயிறுகள் பாலத்திற்கு குறுக்காக பல அடுக்குகளின் கட்டப்பட்டிருப்பதால் படகில் ஏறவருகின்ற நெடுந்தீவு மக்கள் மற்றும் சுற்றுலாவிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதுடன், தடுக்கி விழுந்து உபாதைகளுக்கு உள்ளாகின்றமையும் தொடர்கின்றது.

இது தொடர்பில் படகு பணியாளர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பல தடவைகள் அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் சிரமங்களை தொடர்ந்து அனுபவிப்பதாகவும் பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது விடயமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன், நெடுந்தீவு சார் அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் இதற்கு முன்னுரிமை வழங்க வேண்டுமெனவும் அன்றாடம் பாதிக்கப்படும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.