இலங்கை நாட்டில் யாரும் எங்கும் தடையின்றி சென்றுவரலாம் என்றுள்ள நிலையில் சுற்றுலாவிகள் படகுசேவையின் போது “ நெடுந்தீவு படகுகள் நயினாதீவுக்கும் , நயினாதீவு படகுகள் நெடுந்தீவுக்கும் செல்ல முடியாது” என்ற ஒரு எழுதப்படாத சட்டம் கடந்த சில மாதங்களாக நடைமுறையில் உள்ளதுடன் இதனால் நெடுந்தீவின் சுற்றுலா துறைசார்ந்தோரே முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் யாழ் மாவட்ட அரச அதிபர் முதல் நெடுந்தீவு மற்றும் வேலணை பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் துறைசார்ந்தோருக்கும் தெரிந்தாலும் ஏன் இன்னும் இதற்கான முடிவு எட்டப்படவில்லை என்பது கேள்விக்குரியதொன்றாகவே தொடர்கிறது.
இன்றையதினம் (ஒக். 15) நெடுந்தீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலில் இவ் விடயமும் ஆராயப்பட்டதாகவும் தீர்வு எட்டப்படவில்லை என்றும் தெரியவருகின்றது.
யாழ் மாவட்டத்தின் இரண்டு பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட இவ் இரு தீவுகளதும் நிர்வாகம் யார் கையில் உள்ளது என்பது , இரு தீவுகளதும் சுற்றாலா படகு சேவை தொடர்பான பிரச்சானைக்கான தீர்வு காண்பதில் பெரும் கேள்வியை உருவாக்கிவிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
நெடுந்தீவுக்கு வரும் சுற்றுலாவிகளுக்கான கடற்போக்குவரத்துக்கான படகுகள் சேவை சீரின்மையால் குறிகாட்டுவான் துறைமுகத்துடன் திரும்பிச் செல்லும்நிலை கடந்த பல மதங்களாக இடம்பெற்றுவருகின்றதுடன் இதற்கேற்ற சீரான ஒழுங்குகளை செய்யவும் யாரும் முன்வரவில்லை.
சுற்றுலாத்துறையை ஊக்கப்படுத்தி அதனூடாக நெடுந்தீவுக்கான வருமானத்தை உயர்த்தி தேவைகளை நிறைவேற்றும் வகையில் நெடுந்தீவு பிரதேச சபை செயற்படுமா என்பது விளங்கவில்லை என சுற்றுலா துறைசார் நெடுந்தீவு முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் நயினாதீவைச் சேர்ந்த படகுகளும் நெடுந்தீவுக்கான சுற்றுலாவிகளை ஏற்றிவந்தநிலையில் பெருமளவானோர் தீவுக்கு வந்துசென்றமை யாவரும் அறிந்த விடயம். இதேவேளை தற்போது நெடுந்தீவில் உள்ள படகுகளும் , அனலைதீவைச் சேர்ந்த படகுகளும் சுற்றுலாவிகளை ஏற்றியிறக்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் சில படகுகள் நிர்ணயிக்கப்பட்ட ஒரு கட்டண வரையறையின்றி எழுந்தமானமான , அதிகரித்த படகு வாடகையை அறவிட்டு வருவதாக சுற்றுலாவிகள் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாவிகளுக்கான போதிய வாடகைப் படகுகள் இன்மையாலேயே அவர்களது நலன் கருதி நெடுந்தீவுக்கான பயணிகள் படகு சேவையும் அரச அதிகாரிகளால் அதிகரிக்கப்பட்டதாக தெரியவருகின்றது ஆனால் படகின்மைக்கான காரணத்தை அறிந்து அதனை தீர்க்க வழிசெய்ய முடியாத நிர்வாகமாக உள்ளமை கவலைக்குரியது.
சுற்றுலாவிகளின் வருகை குறைவடைந்தமையால் நெடுந்தீவில் உள்ள வாடகை வண்டி உரிமையாளர்கள், தங்குமிட உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இந்நிலைமைகளை உரிய அதிகாரிகளும் , பொறுப்பானவர்களும் , மக்கள் பிரதிநிதிகளும் விரைவில் ஆராய்ந்து நெடுந்தீவுக்கான சுற்றுலாத்துறையினை முன்னேற்ற வழிசமைக்கவேண்டுமென நெடுந்தீவில் உள்ள துறைசார்ந்தோர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.