நெடுந்தீவு குறிகாட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்தில் ஞாயிற்றுக்கிழமையும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் படகுகள் சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதி யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து தொடர்பான செயற்குழுவின் கூட்டத்தில் இன்றையதினம் (ஒக். 14) வழங்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஒக். 19) தொடக்கம் நெடுந்தீவில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் படகு மீண்டும் குறிகட்டுவானில் இருந்து காலை 7.30 மணிக்கு நெடுந்தீவு நோக்கி புறப்படும்.
பிற்பகல் 3.30 மணிக்கு நெடுந்தீவிலிருந்து புறப்பட்டு மீண்டும் படகு குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்கு பிற்பகல் 4.30 மணிக்கு புறப்படும் .
நெடுந்தீவுக்கான வடதாரகை மற்றும் நெடுந்தாரகை போக்குவரத்து விடுமுறை நாளாக கருதி தவிர்க்கப்பட்டிருந்தது. இதேவேளை இச் சேவையில் ஈடுபட்டுவந்த நெடுந்தீவு பல. நோ. கூட்டுறவுசங்கத்தினுடைய படகு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செல்வுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருத்த வேலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளமையினால் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்தினை இலகுவாக்குவதன் பொருட்டு இக் கோரிக்கையினை யாழ் அரசாங்க அதிபர் முன்வைத்த போது அதற்குரிய அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது.
இக் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து தொடர்பான செயற்குழுவின்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.இளங்குமரன் , வீதி அபிவிருத்திஅதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் யொ.குறுஸ் , வடக்கு மாகாணஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் , பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும்சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் நிரோசன் ரட்ணாயக்க அவர்களதுபிரத்தியோக இணைப்பாளர் ஶ்ரீவர்னன் ஆகியோர் கலந்துகொண்டனர்.