நெடுந்தீவு மக்களின் குடிநீர் பிரச்சினையினை உரிய அதிகாரிகள் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் வழங்கப்பட்டு வரும் நெடுந்தீவுக்கான குடிநீர் இரு வகையாக வழங்கப்பட்டு வருவதாக பயனாளிகள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறும் , அதனை சீர்செய்ய தேவையான உதிரிப்பாகங்களை இலங்கையில் கொள்வனவு செய்ய முடியாத நிலையிலுமே மட்டுப்படுத்தப்பட்ட சுத்திகரித்த நீர் விநியோகம் இடம்பெறுவதாக தெரியவருகின்றதுடன் , சுத்திகரிப்பு நிலையத்தில் வைத்தும் மட்டுப்படுத்திய அளவில் குடிநீர் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கிழக்காக உள்ள பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் , மக்கள் செறிந்து வாழ்கின்ற ஏனைய பகுதிகளுக்கு சாறாப்பிட்டி நிலையத்தில் இருந்து சாதாரண குடிநீரும் வழங்கப்பட்டு வருகின்றது,
இவ்வாறு சாறாப்பிட்டியில் இருந்து வழங்கப்பட்டுவரும் குடிநீரானது தற்போது குடிநீர்த் தேவைக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு உவர்த்தன்மை அடைந்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளதுடன், பாவனைக்குதவாத நீருக்கு கட்டணம்செலுத்த வேண்டியுள்ளதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பாக உரியவர்களும் , நெடுந்தீவின் நிர்வாகிகளும் விரைந்து கூடிய அக்கறை எடுத்து மக்களின் குடிநீர் பிரச்சனையினை தீர்க்க வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.