நெடுந்தீவு பிரதேச சபையினருக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபையினருக்கும் இடையிலான உள்ளூர் பிரதேச அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (03.03) நெடுந்தீவு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் 10 ஆண்டுகள் இலக்கு நோக்கிய பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நெடுந்தீவில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது நெடுந்தீவுக்கான புதிய பயணிகள் படகு கொள்வனவு, இறங்குதுறைகள், வீதிகள், குளங்கள், சுற்றுலாத்துறை மையங்களது அபிவிருத்திகள் மற்றும் கடல் பாதுகாப்பு அணைகள், சிறுகைத்தொழில் நிலையங்கள், சூரிய சக்தி மின்சாரம், குடிநீர் மற்றும் மக்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் இவை தொடர்பிலான திட்டங்கள் நெடுந்தீவு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.

பிரதேசசபை தவிசாளர் ச.சத்தியவரதன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதேச சபை செயலாளர் மற்றும் உறுப்பினர்களும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
