சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட இரண்டாம் தவணை கடன்தொகையை இலங்கைக்கு வழங்க நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(டிசம்பர் 13) இடம்பெற்ற அமர்வின் போது திடீரென சபைக்கு வந்த ஜனாதிபதி விசேட உரையொன்றை ஆற்றினார்.
இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“நான் இன்று சபையில் மிகுந்த மகிழ்ச்சியுடன் உரையாற்றுகிறேன். திவாலான நாடு என்ற முத்திரையைக் காப்பாற்ற நாங்கள் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த பயணத்தில் ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துவிட்டோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதை வழிநடத்த முடிந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் கடந்த ஆண்டு திவாலான நாட்டை பொறுப்பேற்றேன். இந்த திவாலான நாட்டைக் பொறுப்பேற்க எந்தத் தலைவரும் முன்வரவில்லை.
இந்த சவாலை ஏற்க அனைவரும் பயந்தனர். இப்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றும் மாவீரர்கள் எவருக்கும் முன்வருவதற்கு தைரியம் இல்லை. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன்.
நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள். உண்மையை மக்கள் அறிவார்கள். தாய் நாட்டை பாதுகாத்துள்ளேன்.
பொருளாதார மீட்சிக்காக தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மறுசீரமைத்தால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் எவரும் ஒத்துழைப்பு வழங்க முன் வரமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.