தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை முதல் ஆரம்பம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

சுகாதார அமைச்சு அறிவித்துள்ளவாறு, தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நாடளாவிய முறையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த வாரத்தில் தினந்தோறும் விபத்துத் தடுப்பு குறித்து தனித்தனி கவனம் செலுத்தப்படும்:

  • ஜூலை 7 – வீதி விபத்து தடுப்பு நாள்

  • ஜூலை 8 – பணியிட விபத்து தடுப்பு நாள்

  • ஜூலை 9 – வீடு மற்றும் முதியோர் இல்ல விபத்து தடுப்பு நாள்

  • ஜூலை 10 – நீரில் மூழ்கும் விபத்துகள் தடுப்பு நாள்

  • ஜூலை 11 – பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களில் விபத்துகள் தடுப்பு நாள்

இந்த வாரத்தின் நோக்கம், விபத்துக்களை குறைக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அபாயம் மிகுந்த இடங்களில் ஆய்வு மேற்கொள்வதுடன், குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை செயல்படுத்துவதாகும்.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தரவுகளின்படி:

  • ஒவ்வொரு நிமிடத்திலும் 6-8 இலங்கையர்கள் விபத்தால் வைத்தியசாலையில் சிகிச்சை தேவைப்படுகிறார்கள்.

  • 7 பேரில் ஒருவர், ஆண்டுதோறும் விபத்துக்குள் சிக்கி வைத்திய சிகிச்சை பெறுகிறார்.

  • 15-44 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

  • ஆண்டுக்கு 2,500 – 3,000 பேர் விபத்துகள் காரணமாக வைத்தியசாலைகளில் உயிரிழக்கிறார்கள்.

  • ஆண்டுக்கு 10,000 – 12,000 விபத்தால் ஏற்படும் இறப்புகள் பதிவாகுகின்றன, இது மாதத்திற்கு சுமார் 1,000 பேர் மற்றும் மூன்று மணி நேரத்திற்கு ஒருவருக்கும் மேற்பட்ட உயிரிழப்பு என்பதைக் குறிக்கிறது.

  • இவ்விபத்துகளில் 7,500 – 8,000 பேர் வைத்தியசாலையை அடையும் முன்னே உயிரிழக்கிறார்கள்.

அரசு வைத்தியசாலைகளில் பதிவாகும் விபத்துகளுள்:

  • கீழே விழும் காயங்கள் – அதிகம்

  • வாகன விபத்துகள் – 15%

  • விலங்கு கடித்தல் – 14%

  • தற்செயலான/வேண்டுமென்ற தாக்குதல்கள் – 11%

  • வெட்டுகள், சிராய்ப்புகள் – 8%

மேலும், தற்கொலைகள், நீரில் மூழ்குதல், விஷமடைதல், விலங்கு தாக்குதல்கள், கொலைகள் போன்ற சம்பவங்களும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ளன.

சுகாதார அமைச்சு, இந்த தேசிய வாரம் பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு விழிப்புணர்வை உருவாக்கி, நாடு முழுவதும் விபத்து அபாயங்களை குறைக்கும் முக்கிய முயற்சியாக செயல்படும் என எதிர்பார்க்கிறது.

Share this Article