எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சினால் தேசிய மகளிர் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஆண்டு மகளிர் தினத்திற்கான தேசிய கருப்பொருள் “நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்” என்பதாகும். அந்த வகையில் மார்ச் 2ம் திகதி முதல் 8ம் திகதி வரையான ஒருவார காலப்பகுதி தேசிய மகளிர் வாரமாக சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒருவார காலப்பகுதியில் பெண்களின் ஆரோக்கியம், பெண்களை அறிவூட்டல், பெண்களின் பாதுகாப்பு, பெண்களை வலுவூட்டல் மற்றும் அவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு நாடு முழுவதும் தொடர்ச்சியான செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.
பெண் தொழில்முனைவோரை ஊக்குவித்து அவர்களுக்கான சந்தை வசதியை உருவாக்குவதற்காக “லிய சக்தி” பெண்கள் சந்தை ஒன்றை மார்ச் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு இம்முறை பெண்கள் தின கொண்டாட்டங்கள் சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன ஆகியோரின் எண்ணக்கருவுக்கு ஏற்ப பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் பத்தரமுல்ல “சுஹுருபாய” கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது