தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பெருமளவு பொதுமக்கள் பங்குபற்றுதலுடன் விற்பனைக் கண்காட்சி ஆரம்பமாகியது.
புத்தாண்டை முன்னிட்டு, உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு நல்லதொரு தொழில் சந்தை வாய்ப்பினை வழங்குவதன் ஊடாக அவர்களின் தொழில் முயற்சிக்கு ஒரு புது உத்வேகத்தினை வழங்கும் நோக்குடன் இந்த விற்பனை கண்காட்சி இடம்பெற்றது.
இந்த விற்பனைச் சந்தையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதேச செயலாளர், இந்த விற்பனைச் சந்தையானது நியாயமான விலையில் இடைத்தரகர்கள் இல்லாமல் பொருட்களை கொள்வனவு செய்யும் வாய்ப்பினை பொது மக்களுக்கு வழங்குகின்றது.
எனவே இந்த விற்பனைச் சந்தை நேற்றும் இன்றும் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதால் பொது மக்கள் வருகை தந்து நியாயமான விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காலத்தில் பொது மக்கள் அனைவரும் தமது சுய தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொள்ள வேண்டும்.
அதன் மூலம் அனைத்துப் பொருட்களுக்கும் பிறரை நம்பி இருக்கும் நிலை மாறி அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பலவற்றை நாமே உற்பத்தி செய்து பெற்றுக் கொள்ளும் நிலமைக்கு மாறுவதே எமது நாட்டினை முன்னேற்றுவதற்குரிய சிறந்த உபாயமாகும்.
ஏனைய பிரதேசங்களை விட எமது பிரதேசத்தில் வசிக்கும் பெருமளவு பொது மக்களுக்கு அவர்களது தொழில் முயற்சியினை ஊக்கப்படுத்தும் நோக்கில் பல இலட்சங்கள் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு வழங்கப்பட்ட உதவிகளை சரியாகப் பயன்படுத்தி சிறந்த தொழில் முயற்சியாளர்களாக மாறி உங்கள் குடும்பத்தையும் நாட்டினையும் வலுப்படுத்துவதற்கு பொது மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயலாற்ற வேண்டும் என பிரதேச செயலாளர் வேண்டுகோள் விடுத்தார்.