துணுக்காய், கோட்டைகட்டிய குளத்தில் இயந்திரம் மூலம் நெல் நடுகை தொடக்க விழா!!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

விவசாயிகளிடமிருந்து நெல்லை நியாயமான விலைக்குக் கொள்வனவு செய்யவும், மக்களுக்கு மலிவு விலையில் அரிசியை வழங்கவும் கூட்டுறவுச் சங்கங்களாலேயே முடியும்.

எமது இந்த மக்கள் நல முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயற்படும் மாபியாக்களைத் தாண்டி, இத்திட்டத்தை நாம் நிச்சயம் வெற்றிகரமாகச் செய்து முடிப்போம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

நெல் நடுகை இயந்திரத் தொடக்க விழா நேற்று (24.04) துணுக்காய், கோட்டைகட்டிய குளத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், நெல் நடுகை இயந்திரத்தை உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைத்ததுடன், இயந்திரம் மூலமான நடுகைச் செயற்பாடுகளையும் நேரில் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, மல்லாவியில் ‘சியாப்’ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட விதை நெல் தூய்மையாக்கல் இயந்திரத்தைப் பொருத்துவதற்கான அடிக்கல்லை நாட்டியதுடன், தூய விதை நெல் உற்பத்தித் திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள வயல் நிலங்களையும் பார்வையிட்டார்.

விவசாயிகளுடனான கலந்துரையாடலின் போது ஆளுநர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

வளங்கள் நிறைந்த முல்லைத்தீவு மாவட்டம் வறுமையில் முதலிடத்தில் இருப்பது கவலைக்குரியது. இதனை எம்மால் மாற்ற முடியும்.

எமது இயற்கை வளங்களை முழுமையாகவும் அறிவியல் ரீதியாகவும் பயன்படுத்துவதன் ஊடாகவே மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும்.

கடந்த காலங்களில் எமது மாகாணத்திற்குக் கிடைத்த பல உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடந்தன. அவற்றை மீள இயக்க நாம் எடுத்து வரும் முயற்சியின் ஒரு பலனாகவே, தற்போது இந்த சங்கத்தின் அரிசி ஆலை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு மத்திய அமைச்சர்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றனர். இந்தச் சாதகமான அரசியல் சூழலை விவசாயிகள் மற்றும் கூட்டுறவுத்துறையினர் சரியாகப் பயன்படுத்தி மாகாணத்தை மேம்படுத்த முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் அகிலன் கதிர்காமர் தெரிவிக்கையில், ஏனைய மாகாணங்களில் பயன்படுத்தப்படாது முடங்கிக்கிடந்த 24 நெல் நடுகை இயந்திரங்களை ஆளுநரின் விசேட கோரிக்கைக்கு அமைய விவசாய அமைச்சர் லால் காந்த எமது மாகாணத்துக்கு வழங்கியுள்ளார்.

சர்வதேச ரீதியாக உர விநியோகத்தில் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், இந்த இயந்திர நடுகை முறைமை மிகக் குறைந்த உரப் பாவனையுடன் அதிக விளைச்சலைத் தரக்கூடியது. இது நவீன விவசாயத்தை ஊக்குவிப்பதுடன் மாகாணத்தின் உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், துணுக்காய் உதவிப் பிரதேச செயலாளர், மாகாண மற்றும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர்கள், வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், துணுக்காய் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான விவசாயிகள் கலந்து கொண்டனர்

Share this Article
Leave a comment