தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து பாதுகாப்பு துறை அசமந்த போக்கு – ஞானசார தேரர்

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

நாட்டில் தீவிரவாதக் கொள்கைகளை உடையவர்கள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றமை மிகவும் ஆபத்தானதாகும்.

இது குறித்து ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு நான்கு பக்கக் கடிதம் ஒன்றை அனுப்பிய போதிலும், இதுவரை அதற்கு எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்……

பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் ஒரு மௌலவியா இல்லையா என்பதையும், அவரது மதக் கொள்கை என்ன என்பதையும் பகிரங்கப்படுத்துமாறு இதற்கு முன்னரும் நான் சவால் விடுத்திருக்கின்றேன். அவ்வாறு என்னால் முன்னதாக விடுக்கப்பட்ட சவாலுக்கு அவர் பதிலளிக்கவில்லை. அதற்குப் பதிலாக இணையத்தில் தெளிவற்ற கருத்துக்களே பரப்பப்படுகின்றன.

நாட்டில் தீவிரவாதக் கொள்கைகளை உடையவர்கள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றமை மிகவும் ஆபத்தானதாகும். குறிப்பாக வக்ஃப் சபை போன்ற நாட்டின் பள்ளிவாசல்களை நிர்வகிக்கும் ஒரு முக்கிய நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள எட்டு நபர்களில், ஆறு பேர் தீவிரவாதக் கொள்கைகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கின்றோம்.

ஜித்தாவிற்கு ஒரு அதிகாரியை நியமிக்க முயன்றபோது, சவூதி பாதுகாப்புத் துறையினர் அந்த நபரை தீவிரவாதக் கொள்கையுடையவர் என்று கூறி நிராகரித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், இலங்கையின் பாதுகாப்புத் துறையினர் இது குறித்து அசமந்த போக்குடன் இருக்கின்றனர்.

வக்ஃப் சபை நியமனங்கள் மற்றும் நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு நான்கு பக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கின்றேன். ஆனால் இதுவரை அதற்கு எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை.

இவ்வாறான நியமனங்கள் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாகும். இது குறித்து புலனாய்வுத் துறையினர் மற்றும் பாதுகாப்புச் சபை உடனடி கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கு இவ்வாறான சில குழுக்கள் உதவியிருக்கலாம். அதன் காரணமாகவே இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த நிலைமை தொடர்வது நாட்டுக்கு ஆபத்தானது என எச்சரிக்கின்றோம் என்றார்.

Share this Article