திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் புனிதத்தன்மையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள வியாபார நிலையங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதற்கு கலாசார மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், வியாபார நிலையங்களை அமைப்பதற்கு பொருத்தமான இடங்களை அமைச்சர்கள் இருவரும் பார்வையிட்ட நிலையில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார்.

திருக்கோணேஸ்வர ஆலய முன்றலில் வியார செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களினால் ஆலயத்தின் பாரம்பரியத்திற்கும் விழுமியங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் முனவைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய குறித்த இரண்டு அமைச்சர்களும் இன்று திருகோணேஸ்வர ஆலயத்திற்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.

இதன்போது, குறித்த பிரதேசத்தில் வியாபார செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில், எந்தவொரு தரப்பினாலும் அதிருப்தி வெளியிடப்படாத நிலையில், குறிப்பிடத்தக்களவு காலம் வியாபார நிலையங்களை நடத்தி வருகின்றவர்களின் வாழ்வாதாரத்தினையும் கருத்தில் கொண்டு, ஆலயத்தின் புனிதத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில், பொருத்தமான இடங்களில் வியாபார நிலையங்களை அமைத்து வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் நிர்வாக சபையினரைக் சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மதங்களின் விழுமியங்களும் நம்பிக்கைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போதைய அரசாங்கம் இருகின்ற நிலையில், எந்தவொரு மதத்தினதும் நம்பிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமாயின் அதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article