தினக்குரல் பத்திரிகையின் நிறுவுநரும், நோர்தேன் சென்றல் வைத்தியசாலையின் நிறுவுநரும், தலைவருமான எஸ்.பி. சாமி (செல்லையா பொன்னுசாமி) அவர்கள், புதன்கிழமை (பெப் 19) மாலை தனது 89 ஆவது வயதில் காலமானார்.
இவர் பற்றிய சுருக்கம்
சமூக சேவகராகப் போற்றப்பட்ட செல்லையா பொன்னுசாமி அவர்கள் 1936 ஆம் ஆண்டு தை மாதம் 1ஆம் திகதி, தீவகம் வேலணையில் பிறந்தார்.
கொழும்பில் நீண்ட காலம் வசித்த அவர், அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி சங்கத்தின் தலைவராகவும்மற்றும் கொழும்பு புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
1978 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் சென்றல் நேசிங் ஹோம் தனியார் வைத்தியசாலையை நிறுவிய அவர், அதன் தரத்தை உயர்த்தி நோர்தேன் சென்றல் வைத்தியசாலையாக மாற்றி, இறுதிவரை அதன் தலைவராக செயல்பட்டார்.
ஊடக மற்றும் சமூக சேவையில் இவரின் பங்கு
தமிழ் இனத்திற்காக பாடுபட்ட சமூக போராளியான செல்லையா பொன்னுசாமி, தமிழ் மக்களின் துயரங்களை வெளிப்படுத்த 1997 ஆம் ஆண்டு தனது அனுபவங்களை ஒன்றாக சேர்த்து தினக்குரல் பத்திரிகையை நிறுவினார். இதன் மூலம் தமிழ் பத்திரிகை வரலாற்றில் அவர் மறக்க முடியாத முத்திரையை பதித்தார்.
தமிழர் துயரங்களை வெளிக்கொணர கொழும்பில் வெளிவந்த தினக்குரல் பத்திரிகையை, வடக்கு-கிழக்கு மக்களுக்கு அருகாக இருக்க யாழ் தினக்குரல் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் தொடங்கினார்.
இறுதி யுத்தத்தின் கொடுமைகளை நேரில் பார்த்து, பாதிக்கப்பட்ட மக்களை ஆதரிக்க சமய, சமூக அமைப்புகளுடன் இணைந்து பல நடவடிக்கைகளை முன்னெடுத்தார். போருக்குப் பின்னர் மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகளை பத்திரிகை ஊடாக வெளிப்படுத்துவதில் அவர் அக்கறை செலுத்தினார்.
தினக்குரல் பத்திரிகை மற்றும் கருணைப்பாலம் அமைப்பின் மூலம், வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல உதவிகளை செய்தார்.
மேலும், தீவகத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் பல்வேறு பாடசாலைகளின் பௌதீக வள அபிவிருத்திக்காகஉதவியுள்ளார்.
இறுதி அஞ்சலி மற்றும் தகனம்
அன்னாரின் உடல் இன்று (பெப்ரவரி 21, வெள்ளிக்கிழமை) மாலை 04.00 மணிக்கு, யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெருவிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இறுதி கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும். காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்படவுள்ளன. பின்னர், தகனத்திற்காக அவரது உடல் வேலணை சாட்டி இந்து மயானத்திற்குஎடுத்துச் செல்லப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.