தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்! கூடும் ஐ.நா பொதுசபை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையேயான போர் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் தீவிரமாகத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதால் அங்கே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 10 ஆவது அவசர சந்திப்பு நாளைமறுதினம் (ஒக்ரோபர் 26)  நடைபெறும் என அதன் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் (Dennis Francis) அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுசபையின் உறுப்பு நாடுகள் அவசர சந்திப்பிற்கு ஐ.நா. பொதுசபைக்கு கோரிக்கை வைத்தன. இக்கோரிக்கையை ஏற்று அவசர கூட்டம் வரும் 26 ஆம் திகதியன்று நடத்தப்படும் என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் டென்னிஸ் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2022 பெப்ரவரி மாதம் தனது அண்டை நாடான உக்ரைனை ரஷ்யா ஆக்ரமித்ததையடுத்து அவசர கூட்டம் நடைபெற்றது.

உலக சூழலுக்கு ஏற்ப 24 மணி நேரத்திலேயே அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க ஐ.நா. பொதுசபைக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் 193 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் (UNO), 6 முக்கிய உறுப்பு அமைப்புகளில் முக்கியமானது, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA). பொதுசபை, 1945ல் ஐ.நா. கூட்டமைப்பின் கொள்கை முடிவுகளை வகுக்கவும், உலக நாடுகளுக்கிடையே சச்சரவு எழும் போது ஐ.நா. சபையின் பிரதிநிதியாக செயல்பட்டு முக்கிய முடிவுகளை எடுக்கவும் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Article