அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் தபால் திணைக்களத்தை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதே தவிர , அதைத் தனியாருக்கு விற்பதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்று ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தபால் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்காக புதிய சட்ட வரைவு தயாரிப்புப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
இந்த ஆண்டுக்குள் அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளோம். கடந்த ஆண்டு தபால் திணைக்களத்தின் வருமானத்தை விட செலவு இரு மடங்காகும்.
இந்த ஆண்டுக்குள் வரவை மீறிய செலவைக் குறைப்பதற்குக் திட்டமிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு வரவு மற்றும் செலவைச் சமநிலைப்படுத்தவும், 2025ஆம் ஆண்டு தபால் திணைக்களத்தை இலாபமீட்டும் நிறுவனமாக்குவதற்குமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தபால் திணைக்களத்தை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
10 பில்லயனாக மதிப்பிடப்பட்டுள்ள இந்த வேலைத் திட்டத்தில் 9 பில்லியன் தனியார் முதலீடும் , ஒரு பில்லியன் அரச முதலீடுமாகும். அரச , தனியார் கூட்டு முயற்சியில் தபால் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தப்படுமே தவிர, ஒருபோதும் அதைத் தனியாருக்கு விற்பதற்கு அரசாங்கம் முயற்சிக்காது.
தற்போது முத்திரைகள் ஊடாக வருடத்துக்கு 4000 மில்லியன் ரூபாவும் , முத்திரை குத்துதல் ஊடாக 668 மில்லியன் ரூபாவும் , தபால் பரிமாறத்தின் ஊடாக கடந்த ஜூன் 31ஆம் திகதி வரை 130 மில்லியன் ரூபாவும் வருமானமாக கிடைத்துள்ளது.
இவை தவிர தபால் பொதி சேவை , வீடுகளுக்கே தபால் பொதிகளை விநியோகித்தல் , ஏனைய பதிவு சான்றிதழ்களை விநியோகித்தல் உள்ளிட்ட சேவைகளையும் தபால் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
தபால் பொதி சேவையை மேலும் வினைத் திறனாக முன்னெடுப்பதற்காக விரைவில் ஆயிரம் முச்சக்கர வண்டிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன – என்றார்.