யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் குருதி கையிருப்பானது ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் தன்னார்வ குருதிக் கொடையாளர்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வருமாறு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வைத்தியசாலையில் அதிகரித்து செல்கின்றதனால் இரத்த வங்கியால் விநியோகிக்கப்படுகின்ற குருதியின் அளவும் கூடிக் கொண்டே செல்கின்றதாக இரத்த வங்கியினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இந்த குருதி தேவை அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக் கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இதனால் இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாம் பல இடங்களுக்குச் சென்று குருதியைச் சேகரித்து வருகின்றோம். குறிப்பாக தற்போதைய அவசர நிலையில் வடக்கு மாகாணத்திற்கு வெளியே உள்ள பகுதிகளுக்கும் சென்று குருதியை சேகரித்து வருகின்றோம்.
இருந்தபோதிலும் சேகரிக்கப்படும் குருதியின் அளவை காட்டிலும் பயன்பாட்டிற்கு தேவைப்படும் குருதியின் அளவு அதிகரித்து காணப்படுவதனால் குறிப்பிட்ட சில காலங்களில் குருதியின் கையிருப்பு குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.
எமது இரத்த வங்கியில் 330 பைந்த் குருதி குறையாமல் இருக்க வேண்டும். அனால் தற்போது இருக்கும் குருதியின் அளவு 238 பைந்த் ஆகும். இது ஆபத்தான நிலையாகும்.
இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை எம்மால் வழங்க முடியாமலுள்ளது. ஒரு அனர்த்தம் நிகழுமாயின் அதனால் ஏற்படும் குருதியிழப்பை ஈடுசெய்வதற்கு எம்மால் முடியாமல் போகலாம். அவ்வாறான நிலை ஏற்படுமாயின் பாரிய நெருக்கடியை நாமும் எமது சமூகமும் எதிர்நோக்க வேண்டியேற்படுவது தவிர்க்கவியலாததாகிவிடும்.
ஆகவே இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு தன்னார்வ குருதிக் கொடையாளர்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வருமாறு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்திற்குட்பட்ட பகுதிகளில் குறைந்தது 30 கொடையாளர்களை ஒருங்கிணைத்து குருதிக் கொடை முகாம்களை ஏற்பாடு செய்யும் பட்சத்தில் யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினால் நேரடியாக வருகைதந்து குருதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தன்னார்வ குருதிக் கொடை முகாம்களை ஒழுங்கு செய்யும் தரப்பினர் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.