சுகாதாரப் பிரிவினர் எனத் தெரிவித்து வீடுகளுக்குள் சோதனை செய்யவும் பதிவினை மேற்கொள்ளவும் எனத் தெரிவித்து, கொள்ளையடிப்பில் ஈடுபட்ட பெண்ணை மக்கள் மடக்கப்பிடித்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
வீடுகளுக்குள் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்து வீட்டின் உள்ளே சென்று, வீட்டில் உள்ளிருந்த பெண்ணொருவரின் தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் குறித்த பெண் தப்பித்துள்ளார்.
இச் சம்பவம் வடமராட்சி, தொண்டைமானாறு, அரசடியில் இடம்பெற்றுள்ளது. இன்று நண்பகல் தன்னை சுகாதாரத் துறை உத்தியோகத்தராக கூறிக் கொண்டு இப் பகுதியில் பல வீடுகளுக்குச் சென்று பதிவுகளையம் மேற்கொண்டுள்ளார்.
இதன் போது தனித்திருந்த பெண்ணொருவரின் வீட்டிற்குள்ச் சென்று அவரது கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பித்துள்ளார்.
வீட்டில் இருந்த பெண் கூக்குரல் எழுப்பியதை அடுத்து அயலவர்கள் துரத்திச் சென்றனர்.
கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணை துரத்திச் சென்றவர்கள் பலாலி, அன்ரனிபுரத்தில் வைத்து மடக்கிப் பிடித்து, பலாலிப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் தாலிக்கொடி, நகைகள் என பல இலட்சம் பெறுமதியான தங்கநகைகள் குறித்த பெண்ணின் கைப் பையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.