இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் பனைவள உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான காட்சி அறைகளை ஏற்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒரு எளிமையான, மக்களால் விரும்பப்படும் தலைவர் என்பதையும், மக்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய நம்பிக்கைக்குரிய ஒருவராக இருப்பதையும் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் பனை தென்னைவள கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பில், “எங்கள் வாழ்வியலில் பனை” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற பனைவள கண்காட்சியிலும் விற்பனையிலும் அவர் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவை கூறப்பட்டன.
இந்நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, யாழ் மாநகர சபை உறுப்பினர் சு. கபிலன், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர்,
-
பனை உற்பத்தித் துறையில் புதுமையும் மாற்றமும் தேவைப்படுகிறது.
-
இந்த கண்காட்சி அந்த மாற்றத்திற்கான ஆரம்பக்கட்டமாக அமையும் என நம்பிக்கை உள்ளதாகவும், ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றியையும், காட்சியில் பங்கேற்ற உற்பத்தியாளர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
-
பனைவள பொருட்களை நவீன வடிவமைப்பில் மாற்றி, உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும்,
-
பனைவள பொருட்கள் சர்வதேச விமான நிலையங்களில் காட்சிப்படுத்தப்படும் திட்டத்திற்கு தானே நேரடியாக நடவடிக்கை எடுப்பதாகவும்,
-
தற்போது பனை அபிவிருத்தி சபை பெருந்தோட்ட அமைச்சின் கீழ் இருந்தாலும், எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்படும் என்பதற்கான வாய்ப்பும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் சுமார் 1.5 கோடி பனைமரங்கள் உள்ளன. இவற்றை முழுமையாக பயன்படுத்துகிறோமா? சர்வதேச சந்தைக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படுகிறதா? உற்பத்தியாளர்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்படுகிறதா? என்பது கேள்விக்குறியாகவே இருப்பதாக அவர் கவலை தெரிவித்தார். இவ்வெல்லாவற்றிற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இதேவேளை, கடலட்டை ஒரு “கறுப்பு தங்கம்” என அழைக்கப்படுவது போல், அதனை கைப்பற்ற பல சதிகளும் சூழ்ச்சிகளும் நடப்பதாகவும், அவற்றில் அரசாங்கம் சிக்காமல், கடல்வளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.