உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்று (மே 3) உலக நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக பத்திரிகை சுதந்திர தினத்தின் இந்த வருடத்துக்கான கருப்பொருள் ‘உரிமைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பது: மற்றைய அனைத்து மனித உரிமைகளுக்கும் ஒரு இயக்கியாக கருத்துச் சுதந்திரம்’ என்பதாகும்.
பத்திரிகை நிறுவனங்கள் அல்லது ஊடக நிறுவனங்கள் செய்திகளை, கருத்துக்களை சுதந்திரமாக எவ்வித அச்சுறுத்தலும் தடைகளுமின்றி உள்ளதை உள்ளவாறு மக்களுக்கு வெளியிடுவது பத்திரிகை சுதந்திரம் என்று வரை விலக்கணப்படுத்தப்படுகின்றது.
உலக பத்திரிகை சுதந்திர தினமானது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும், ‘மனித உரிமைகள் சாசனம்’ பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று அனுஷ்டிக்கப்படுவது 30 ஆவது வருட உலக பத்திரிகை சுதந்திர தினமாகும்.
பத்திரிகையாளர்கள் தங்களது பொறுப்புகளை உரியபடி உணர்ந்து கொண்டு பணியாற்றுவது மாத்திரமன்றி, பத்திரிகையாளர்களின் பொறுப்புகள் தொடர்பாக அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தமது கடமைமைய செவ்வனே செய்வதும் அவசியமாகின்றது குறிப்பிடத்தக்கது.