சமூக ஊடகங்க தகவல்களை ஆராய்ந்த பின்னர் பகிருங்கள் – வடக்கு ஆளுநர்!!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களின் உண்மைத்தன்மையையும், அதன் பின்னணியையும் தீர்க்கமாக ஆராய்ந்த பின்னரே அவற்றிற்கு விருப்பம் தெரிவிக்கவோ அல்லது பகிரவோ வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்புவதால் சமூகத்தில் பல பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

‘சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம்’ எனும் தொனிப்பொருளின் கீழ், வடமாகாண இளையோர் மற்றும் சிறுவர் பங்கேற்புக்கான விசேட மதிப்பளித்தல் நிகழ்வு, யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் ‘சொண்ட்’ நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று (28.05) வியாழக்கிழமை சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்,

‘சமூகத்தில் பாரிய தாக்கத்தைச் செலுத்தும் பிரதான ஊடகமாகச் சமூக வலைத்தளங்கள் மாறியுள்ள இன்றைய காலகட்டத்தில், இவ்வாறானதொரு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறுவது மிகவும் வரவேற்கத்தக்கது.

சில தினங்களுக்கு முன்னர், வடக்கு மாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்கு ஆளுநர் தடை விதித்துள்ளதாகத் தென்பகுதியிலுள்ள சமூக ஊடகங்களில் ஒரு செய்தி திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. சமூகங்களுக்கிடையே குரோதத்தை உருவாக்கும் தீய நோக்கோடு இத்தகைய பொய்ச் செய்திகள் வேகமாகப் பகிரப்பட்டன. இது தொடர்பில் நான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளேன். நாங்கள் சொல்லாத, செய்யாத விடயங்களைக்கூட ஏதோவொரு தேவைக்காக இவ்வாறு சமூகத்தில் பரப்புகின்றார்கள்.

நீங்கள் சமூக விரோதச் செயல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தால், சமூக ஊடகங்கள் ஊடாக உங்கள் மீது சேறுபூசப்படும். உங்களைப் பற்றிப் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு, உங்கள் நன்மதிப்பைக் கெடுப்பதற்கு முற்படுவார்கள். மாறாக, சமூக விரோதச் செயல்களுக்குத் துணை நின்றால் உங்களைத் தூக்கிக் கொண்டாடுவார்கள். துரதிஷ்டவசமாக, தற்போது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களே பலமானவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் பலரை வைத்துச் சமூக ஊடகங்களைத் தமக்குச் சாதகமாக இயக்கியும் வருகின்றனர்.

எனவே, சமூக ஊடகங்களில் வெளிவருகின்ற விடயங்கள் தொடர்பில் இளம் சமுதாயத்தினர் மட்டுமல்லாது, அனைவரும் அதீத அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஒரு தகவல் பகிரப்படும்போது அதன் உண்மைத்தன்மையையோ அல்லது அது எத்தகைய நோக்கத்துக்காகப் பகிரப்படுகின்றது என்பதையோ கட்டாயம் ஆராய வேண்டும். நாம் பின்தொடரும் அல்லது விருப்பம் தெரிவிக்கும் ஒரு சமூக ஊடகப் பதிவு உண்மையானதா என்பதைப் பலமுறை சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகும்’ என வலியுறுத்தினார்.

Share this Article
Leave a comment