இந்தப் பாழாய்ப்போன பதின்மூன்றை அகற்றி விட்டு, சமஷ்டியைக் கொண்டு வந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், சமஷ்டி வரும் வரை நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பான மனோ கணேசனின் முகநூல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசமைப்பில் இருந்து 13 ஆவது திருத்தம் அகற்றப்பட வேண்டும் என வடக்கின் கட்சித் தலைவர் ஒருவர் என்னிடம் நேரடியாகச் சொன்னார்.
என்னப்பா இதைத்தானே சிங்கள இனவாத பிக்குகளும் கூறுகிறார்கள் என எனக்கு சின்னதா ஒரு அதிர்ச்சி. இதை நான் கேட்டேன்.
“இல்லை, அண்ணை, அப்போதுதான், தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஐக்கியம் வரும்” என்றார் அவர். தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையடைவது நல்லதுதானே. அதற்கான இவர்களது ‘லொஜிக்’ இது.
பதின்மூன்று மாகாண சபையா, பதின்மூன்று ப்ளஸ் மாகாண சபையா, இந்திய மாநில ஆட்சி மொடலா, சமஷ்டியா, கூட்டரசா, ஐம்பதுக்கு ஐம்பதா அல்லது கடைசியாக ரணிலின் இடைக்கால ஆலோசனை சபையா… தமக்கு என்ன தீர்வு தேவை என்பதைச் சகோதர ஈழத்தமிழ் தேசிய இனம் தீர்மானிக்கட்டும். அதுதான் உள்ளக சுயநிர்ணய உரிமை.
பதின்மூன்றைக் கொண்டு வந்த பாரத நாடே, அங்குள்ள இந்திய மாநில ஆட்சி அதிகாரங்களுக்கு சமமாகக் கூட, மாகாண சபையை ஏற்பாடு செய்யவில்லை என்றுகூட நான் பகிரங்கமாக அன்று என் உரையில் கூறினேன். நான் எவரையும் பதின்மூன்றை ஏற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறவே இல்லை.
பதின்மூன்று அகற்றப்பட்டு, வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை அவர்கள் நிராகரித்தால், அது அவர்களது கட்சி முடிவு. அக்கட்சியின் முடிவு அப்படி என்றால், அது அவர்களது உரிமை நிலைப்பாடு. அதற்கு நான் என்ன செய்ய முடியும்?
அதேபோல், சின்னதா அதிர்ச்சியடைய எனக்கும் உரிமை இருக்கிறதல்லவா?
ஏனெனில் பதின்மூன்றாம் திருத்தம் அகற்றப்பட்டால், மாகாண சபைகளே போய் விடும். முதலில் மாகாண சபைகளைப் பெற்று அடுத்த கட்டம் நோக்கி நகர்வோம் என எண்ணும் ஏனையோருக்கு இதில் உடன்பாடா எனத் தெரியவில்லை.
மேலும் மாகாண சபை வடக்கில், கிழக்கில் மட்டும் இல்லை. நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் இருக்கின்றன. இந்தப் பாழாய்ப்போன பதின்மூன்றை அகற்றி விட்டு, இவர்கள் சமஷ்டியைக் கொண்டு வந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், சமஷ்டி வரும் வரை நாடு காப்பாற்றப்பட வேண்டும்.
நானறிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் முதல் அமைச்சர் டக்ளஸ் வரை கூட எவரும் பதின்மூன்றை முழுமையான இறுதித் தீர்வாக ஏற்கவில்லை என்று நான் நினைக்கின்றேன். அது இடைக்கால தீர்வுதான். இரா. சம்பந்தன் பலமுறை இது பற்றி தெளிவாகக் கூறி விட்டாரே.” – என்றுள்ளது.