சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்..!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

கிளிநொச்சிப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் ஓய்ந்தாலும், அது விட்டுச்சென்ற சுவடுகளைப் பயன்படுத்தி இடம்பெறும் பகல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துமாறு, கிளிநொச்சி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இன்று(12.12) வெள்ளிக்கிழமை மாலை, கிளிநொச்சிப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கு நேரில் சென்று, இதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு பணித்தனர்.

அண்மையில் இரணைமடுக் குளம் வான் பாய்ந்ததைத் தொடர்ந்து, திருவையாறு, வட்டக்கச்சி, கண்டாவளை ஆகிய பிரதேசங்களின் வீதிகளிலும் வாய்க்கால்களிலும் பெருமளவில் மணல் மண் குவிந்துள்ளது. மக்கள் துயரத்தில் இருக்கும் இந்த வேளையில், இரவு நேரங்களில் சட்டவிரோதமாக டிப்பர்களில் வரும் கும்பல்கள், இந்த மண்ணை அள்ளிச் செல்வதாகப் பொதுமக்களிடமிருந்து அடுக்கடுக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதனைச் சுட்டிக்காட்டிய அமைச்சரும் ஆளுநரும், இயற்கைப் பேரிடரைப் பயன்படுத்தி இடம்பெறும் இந்தச் சட்டவிரோதச் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

சட்டவிரோத மணல் கடத்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்த அந்தப் பகுதிகளில் பொலிஸ் ரோந்து மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் தேவைப்படும் பட்சத்தில், நிலைமையைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினரின் உதவியையும் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சரும், ஆளுநரும் சுட்டிக்காட்டினர்.

குவிந்துள்ள மணலை உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக, சட்டரீதியாக அங்கிருந்து அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த சமூக ஆர்வலர் ஒருவர், அண்மையில் டிப்பர் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்தும் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. இது சாதாரண விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் நிலவுவதை அமைச்சரும் ஆளுநரும் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதற்குப் பதிலளித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர், இது தொடர்பான விசாரணைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து, முழுமையான விசாரணை அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம், என உறுதியளித்தார்.

கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் கலந்துகொண்ட இச்சந்திப்பில், மாவட்டத்தில் தலைதூக்கியுள்ள சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டன.

Share this Article