சட்டத்தரணியும், மனைவியும் காருக்குள் சுட்டுக்கொலை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பத்தரமுல்ல – தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும், அவரது மனைவியும் இன்று (13/02) மாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவரும் கார் ஒன்றின் உள்ளேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி எனவும் மற்றயவர் அவரது மனைவி எனவும் தெரியவருகின்றது. புத்திக மல்லவராச்சி கொழும்பு உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக செயற்பட்டு வருகிறார்.

குறித்த சட்டத்தரணி ‘கரன்தெனிய சுத்த’ என்ற குற்றவாளியின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையானவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன், தனது கட்சிக்காரரின் தகவல்களை ‘லொகு பெட்டி’ என்ற குற்றவாளி தலைமையிலான குழுவிற்கு வழங்கிய காரணத்தினால், கரன்தெனிய சுத்தவினால் இந்தத் துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். 

அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியில் இருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இன்று மாலை 5.00 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

கார் ஒன்றில் வந்த குழுவினர் டி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுமார் 10 தடவைகள் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ரி56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்பதுடன் துப்பாக்கிச் சூடு தொடர்பிதலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article