கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வுப்பணிக்குரிய நிதி இல்லை என முல்லைத்தீவு மாவட்டசெயலக பிரதம கணக்காளர் நேற்று (ஒக்டோபர் 4) தன்னிடம் தெரிவித்ததாகவும், ஏற்கனவே அகழ்வுப்பணிகள் மேற்கொண்டமைக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனவும் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சட்டவைத்திய அதிகாரியின் இத்தகைய கூற்றுக்கு,முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், அகழ்வாய்வுப் பணிக்கென முதற்கட்டமாக பெறப்பட்ட 5.6 மில்லியன் ரூபா பணத்தில், இன்னும் ஒருவாரகாலம் அகழ்வாய்வுப் பணிகளைச் செய்வதற்குரிய நிதி கையிருப்பில் உள்ளதாகவும், மேலதிகமாக நிதி தேவைப்படுகின்றபோது தம்மால் கேட்டுப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு நீதிமன்றத் தீர்மானத்திற்கு அமைவாக தொடர்ந்தும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளை மேற்கொள்ளமுடியும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மேலதிகமான அகழ்வுப்பணி தொடர்பிலும், ஏற்கனவே அகழ்வின்போது எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் பரிசோதனை முடிவுகள் தொடர்பிலும் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவாவிடம் வினவியபோது, முல்லைத்தீவு மாவட்டசெயலக பிரதம கணக்காளர் நிதி இல்லையென நேற்றுப் புதன்கிழமையன்று கூறியுள்ளதாகவும், அகழ்வுப் பணி நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாகவும், உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாவதற்கான சாத்திக்கூறுகளே காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலக பிரதம கணக்காளர் எம்.செல்வரட்ணத்திடம் தொடர்புகொண்டுவினவியபோது,
தாம் நிதியில்லை என சட்டவைத்திய அதிகாரியிடம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்ததுடன், தாம் மாவட்டசெயலரின் அனுமதியின்றி இது தொடர்பில் மேலதிக தகவல் எதனையும் வழங்கமுடியாது எனவும் தெரிவித்தார்.
எனவே இது தொடர்பில் முல்லைத்தீவு மேலதிக மாவட்டசெயலர் க.கனகேஸ்வரிடம் தொடர்புகொண்டு வினவியபோது,
இந்த கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளுக்கென முதற்கட்டமாக 5.6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில், மனிதப் புதைகுழிக்கு பந்தல் இடுகிற செயற்பாடுகள், மலசலகூடம் அமைக்கும் செயற்பாடு உள்ளிட்டவற்றிற்கு இரண்டு மில்லியனுக்கு அதிகமாக நிதி செலவிடப்பட்டுள்ளது.
அத்தோடு அகழ்வாய்வுப் பணிகளில் ஈடுபட்ட ராஜ் சோமதேவ தலைமையிலான தொல்லியல் துறையைச் சார்ந்த குழுவினருக்குரிய பணக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுவிட்டன.தற்போது சட்டவைத்திய அதிகாரிகளுடை பணக்கொடுப்பனவுகளே வழங்கவேண்டியுள்ளது.
நேற்று புதன்கிழமையன்றே அகழ்வாய்வுப்பணிகளில் ஈடுபட்ட தொல்லியல் துறையினரதும், வைத்தியர்களுடையதும் நிதியைப் பெறுவதற்கான பற்றுச்சீட்டுகள் அவர்களுடைய கையொப்பத்துடன், முத்திரை ஒட்டப்பட்டு உரிய முறையில் எமக்கு கிடைத்தன.
அவ்வாறு பணத்தினைப் பெறுவதற்குரிய பற்றுச்சீட்டு எம்மிடம் கிடைத்தவுடனேயே, எம்மால் பணத்தினை வழங்கமுடியாது. ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள நிதியைப் பெறுவதற்கு சில நிதிநடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளைப் பின்பற்றியே எம்மால் அவர்களுடைய கொடுப்பனவுகளை வழங்கமுடியும்.
இருந்தும் எம்மிடமிருந்த வேறு வைப்புப் பணத்தினைப் பயன்படுத்தி தொல்லியல் துறையினருக்குரிய பணக்கொடுப்பனவை வழங்கியுள்ளோம். இனி சட்ட வைத்திய அதிகாரிகளுடைய நிதியே வழங்கப்படவேண்டியுள்ளது.
குறித்த அகழ்வாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்ட வைத்திய அதிகாரிகளுக்கான பணக்கொடுப்பனவுகளை வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டுவிட்டன.
இன்னும் ஓரிருநாட்களில் உரிய கட்டுநிதி எமக்கு கிடைக்கப்பெற்றவுடன், உரிய சட்டவைத்திய அதிகாரிகளுக்கான கசோலைகள் வழங்கப்படும்.
அத்தோடு முற்கட்டமாக ஒதுக்கீடுசெய்யப்பட்ட 5.6மில்லியன்ரூபா நிதியில், 2.6மில்லியன் ரூபா நீதியே செவிடப்பட்டிருக்கின்றது.இந் நிலையில் மிகுதிப்பணத்தைப் பயன்படுத்தி குறித்த கொக்குத்தொடு மனிதப் புதைகுழி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகரப் பந்தலை மேலும் விஸ்தரித்து வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.
அத்தோடு குறித்த மனிதப்புதைகுழி வளாகத்தில் பாதுகாப்பு கண்காணிப்பு கமரா பொருத்தும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.இவ்வாறாக வேலைத்திட்டங்கள் அனைத்தும் கிரமமாக இடம்பெற்று வருகின்றன. நீதிமன்றத்தின் தீர்மானங்களுக்கேற்ப அதற்குரிய மதிப்பீடுகளைச்செய்து தேவையான நிதி ஒதுக்கீடுகளைப் பெறுவோம்.
நீதிமன்றத் தீர்மானத்திற்கு அமைவாக நிதி அமைச்சு நிதி தருவதற்கு தயாராக இருக்கின்றது. அதற்கமைய முதற்கட்டமாக பெறப்பட்ட 5.6மில்லியன்ரூபா பணத்தில், இன்னும் ஒருவாரகாலம் அகழ்வாய்வுப்பணிகளைச் செய்வதற்குரிய நிதி கையிருப்பில் உள்ளது.
மேலதிகமாக நிதி தேவைப்படுகின்றபோது எம்மால் கேட்டுப் பெற்றுக்கொள்ளமுடியும். எனவே நீதிமன்றத் தீர்மானத்துற்கு அமைவாக தொடர்ந்தும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ளமுடியும் என்றார்.