மதுபான விருந்தில் கலந்துகொண்டவர்கள் மதுபோதையில் நண்பரை கிணற்றுக்குள் தள்ளி வீழ்த்திக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உடையார்கட்டு, வெள்ளப்பளத்தைச் சேர்ந்த 21 வயதுடைய விஜயராஜா யசீகரன் என்ற இளைஞர் கடந்த 5 ஆம் திகதி புதுக்குடியிருப்பு சுதந்திரபுரத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
சடலத்தை மீட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணைகளின் அடிப்படையில் இளைஞன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தனர். யசீகரனின் உடலில் நகக்கீறல்கள் காணப்பட்டமை பொலிஸாரின் சந்தேகத்துக்குப் பிரதான காரணமாக இருந்தது.
பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நிலையில், யசீகரன் நண்பர்களுடன் மது விருந்தில் கலந்துகொண்டமை கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து யசீகரனின் நண்பர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல் ஒன்று பொலிஸாருக்குக் கிடைத்திருக்கின்றது. மதுவிருந்தில் யசீகரனும், நண்பர்களும் கலந்துகொண்டிருந்த நிலையில், யசீகரனுடன் நண்பர்கள் சிலருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அந்த வாக்குமூலம் தீவிரமான நிலையில், ஒரு கட்டத்தில் யசீகரனை அவர்கள் அருகில் இருந்த கிணற்றுக்குள் தள்ளி வீழ்த்தியுள்ளனர் என்பதும் தெரியவந்தது. துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் யசீகரனின் நண்பர்கள் மூவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மதுபோதையில் நண்பனையே கிணற்றில் தள்ளி வீழ்த்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.