கோப்பாய் ஆசிரிய கலாசாலை நிறுவப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவுறுவதைக் குறிக்கும் வகையில் கல்லூரித் தினவிழா நாளை (ஒக்ரோபர் 1) ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு கலாசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் இ.இளங்கோவன் பிரதம விருந் தினராகவும், கலாசாலையின் முன்னாள் அதிபர்களான வே.கா.கணபதிப்பிள்ளை, வீ. கருணலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய அதிபர் சாந்தினி வாகீசன் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொள்வர்.
நிகழ்வில் கலாசாலையின் ஓய்வுநிலை பிரதி முதல்வர் பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு எழுதிய வடக்கின் ஆசிரிய கலாசாலைகள் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பற்றிய சிறப்பாய்வு என்ற நூல் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
அத்துடன், விரிவுரையாளர் தர்சினி முத்துராஜாவை பிரதம ஆசிரியராகக் கொண்ட கலாதீபம் மாத இதழின் கல்லூரித்தின சிறப்புப் பிரதியும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
நிகழ்வில் சமயத் தலைவர்களின் ஆசியுரை, நூற்றாண்டைக் குறிக்கும் முகமாக 100 நிறைகுடங்கள் மற்றும் பண்பாட்டு அடையாளங்களுடனான ஊர்வலம் என்பன இடம்பெறவுள்ளதாகவும், கலாசாலையின் பழைய மாணவர்களை நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறும் நூற்றாண்டு விழா ஏற்பாட்டுக்குழுவினர் அழைத்துள்ளனர்.