கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் திருவிழா 27, 28ஆம் திகதிகளில் – போக்குவரத்து, பாதுகாப்பு வழிமுறைகள் அறிவிப்பு

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவில் கலந்து கொள்ளவுள்ள பக்தர்களின் அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதி, உணவு முதலான ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி அதிகாலை 4 மணி தொடக்கம் பிற்பகல் ஒரு மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும். கச்சதீவுக்கான படகுச் சேவை குறிகட்டுவான் இறங்கு துறையில் இருந்து 27 ஆம் திகதி காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இடம்பெறும். குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒருவருக்கான படகிற்குரிய ஒரு வழிப்பயணக் கட்டணம் 1,200 ரூபா ஆகும்.

கச்சதீவுக்கு குழுவாக, தனியாக படகில் வருகை தரும் பக்தர்கள் அவர்களது முழுப்பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைதிபேசி இலக்கம், வயது மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் படகோட்டியின் பெயர், தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் எடுத்து வர வேண்டும்.

அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்பு கொண்டு உரிய கடற்பயண பாதுகாப்பு அனுமதியை பெற்றுக் கொள்வதுடன் 27 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக கச்சதீவை சென்றடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்க வேண்டும். திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 28 ஆம் திகதி காலை உணவு மட்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பக்தர்கள் தங்களது தேவைக்கான உணவுகளை கொண்டுவர முடியும் என்பதுடன் தேவாலயப் பகுதியில் உணவு சமைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் புனித தலமாக உள்ளதால் மதுபானம் கொண்டு செல்லுதல், பாவித்தல் மற்றும் புகை பிடித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.



Share this Article
Leave a comment