ஓடுதளத்தில் திடீரென பற்றி எரிந்த விமானம்! – ஜப்பான் விமான நிலையத்தில் பதற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று(ஜனவரி 1) தலைநகர் டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்தது.

அந்த விமானம் தரையிறங்கும்போது அங்கிருந்த மற்றொரு விமானத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஜப்பான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

விமானத்திற்குள் இருந்த 367 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளடங்கலாக 379 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக, அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

379 பேருடன் வந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குகையில் ஜப்பான் கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதிவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 6 பேரில் ஒருவர் பத்திரமாக வெளியே வந்துவிட்டதாகவும், மேலும் 5 பேரின் நிலை என்னவென்று தெரிவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு அந்த கடலோர காவல்படை விமானம் நிகாட்டா விமான நிலையத்திற்கு செல்லவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு விமானங்களும் எப்படி மோதிக் கொண்டன என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Article