இலங்கை அரசு, உலக குடிசன தினத்தின் பிரதான நிகழ்வை எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி அலரி மாளிகையில் நடத்த உள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (செப். 29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 05 ஆம் திகதியை உலக குடிசன தினமாக அறிவித்து வருகின்றது. இவ்வாண்டுக்கான சர்வதேச கருப்பொருள் “நகர்ப்புற நெருக்கடியின் மீது கவனம் செலுத்துங்கள்” என வகுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, இலங்கையில் குடிசன தினம் “நமக்கென்று ஒரு இடம் – ஒரு அழகான வாழ்க்கை” என்ற தேசிய கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இது, நாட்டின் குடிசன மற்றும் குடியிருப்பு துறையை புதிய திசையில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகின்றது.
மேலும், உலக குடிசன தினத்துடன் இணைந்து ஒக்டோபர் 01 முதல் 05 வரை “தேசிய குடியேற்ற வாரம்”அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,
-
ஒக்டோபர் 01 – தேசிய தொடக்க விழா
-
ஒக்டோபர் 02 – குடியேற்ற கலாச்சார தினம்
-
ஒக்டோபர் 03 – குடியேற்ற மற்றும் இளைஞர் தினம்
-
ஒக்டோபர் 04 – சகவாழ்வு மற்றும் ஒத்துழைப்பு தினம் (அயலவர் நற்புறவு தினம்)
-
ஒக்டோபர் 05 – குடியேற்ற உரையாடல், கண்காட்சி மற்றும் நிறைவு விழா
என தினவாரியான நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.