தீவக கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஊர்காவற்றைறை கோட்டக்கல்வி அலுவலகம் ஊர்காவற்றுறை மத்திய பகுதியில் அமைந்துள்ள றோமன் கத்தோலிக்க தமிழ் ஆண்கள் பாடசாலை வளாகத்திலேயே இயங்கி வருகின்றது.
இந்த நிலையிலே நீண்ட காலமாக தொலைபேசி கட்டணம் செலுத்தப்படாமையால் ஶ்ரீலங்கா ரெலிகொம் தனது தொலைபேசி இணைப்பினை துண்டித்துள்ளது.
அதேவேளை நீண்டகாலமாக மின்சார கட்டண நிலுவை செலுத்தாத காரணத்தினால் மின்சார சபையினரும் அலுவலகத்துக்கான மின் விநியோகத்தினை துண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் கல்விக்கோட்டம் மற்றும் அதனுடன் இணைந்த பாடசாலை என்பவற்றுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அதற்கான ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மின்சார வசதி இல்லையினால் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இதேவேளை கோட்டக்கல்வி பணிமனைக்கென போட்டோ பிரதி இயந்திரமோ அல்லது கணினி உபகரணங்களோ இல்லாத நிலையிலேயே பணிகள் இடம்பெற்று வருகின்றதுடன், சுகாதார முறைப்படியான கழிப்பறை வசதி கூட இல்லாமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
இதே வேளையில் கோட்டக்கல்வி அதிகாரியின் பாவனைக்கென வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள் அவரது அலுவலகப் பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதனால் அதனையும் இதுவரை காலமும் திருத்தம் செய்து வழங்காமல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையிலே ஒரு கல்விக்கான அரச இயந்திரம் கட்டணம் செலுத்தப்படாமல் தொலைபேசி மற்றும் மின்சாரம் என்பன துண்டிக்கப்பட்டு , அடிப்படை மற்றும் பௌதீக வளங்கள் இல்லாத நிலையில் இயங்கி வருகின்ற நிலைமை பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் கவலையினை உண்டாக்கியுள்ளது.
எனவே கல்விதுறை சாரந்த அதிகாரிகள் இவ்விடயத்தில் கூடிய அக்கறை எடுத்து சீரான கல்வி நிர்வாக சேவையினை முன்னெடுக்க முன்வர வேண்டுமென ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.