2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவடைந்த பிறகு மட்டுமே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்சமயம் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டால், பரீட்சை காலத்தில் வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் பரீட்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில், பரீட்சை முடிவடைந்த பின்னரே தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டுமென முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மோசமான காலநிலையால் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள், இந்த வாரம் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கட்சித் தலைவர் கூட்டம் நாளை (டிசம்பர் 03) நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நாளை பிற்பகல் நடத்தப்படும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீளப் பெறுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.