நெடுந்தீவு நேதாமோகனின் “இலை பெய்யும் காலம் “ கவிதை நூல் அண்மையில் நெடுந்தீவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்நூல் பற்றிய புதிய சொல் சஞ்சிகையின் ஆசிரியரும் எழுத்தாளருமான கிரிசாந் அவர்களின் விமர்சனம்.
எழுந்துவரும் புதிய எழுத்தாளர்கள் இன்று எதிர்கொள்ளும் முதன்மையான சிக்கல்களில் ஒன்று தயக்கம். ஈழத்து இலக்கியச் சூழலில் 2009 க்குப் பின்னர் எழுத வந்த முதற் தலைமுறை எழுத்தாளர்களில் பலர் தங்கள் எழுத்தால், அதன் மீதுள்ள தீராத ஆர்வத்தால் இன்று கவனிக்கப்படுபவர்களாக ஆகியிருக்கிறார்கள். தர்மு பிரசாத், அனோஜன் பாலகிருஷ்ணன், அகரமுதல்வன், யதார்த்தன், ஆதி பார்த்திபன் என்று ஒரு வரிசை உருவாகி வந்திருக்கிறது. நானும் இவர்களின் சமகாலத்தில் இலக்கியத்தில் எழுத வந்தவன்.
இன்று பத்தாண்டுகளில் இலக்கியத்தில் இவர்களது இடத்தை உருவாக்கிய முக்கியமான அம்சம், பண்பாட்டில் தன்னுடைய இடம் ‘எழுத்தாளர்’ என்றவர்கள் உணர்ந்தமை. வேறு எதுவுமில்லை நாங்கள் சொல் அமைந்தவர்கள் என்பதை உணர்ந்து தயக்கமின்றி இந்தச் சூழலை எதிர்கொண்டு இன்றவர்கள் எழுத்தினால் தங்களுக்கான இடங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
இன்று வருவபவர்களிடம் ஒரு விதமான தயக்கம் நிலவுவதை அவர்களின் எழுத்துகளில் அவதானிக்கிறேன். அது தேவையற்றது. இலக்கியத்தைப் பொறுத்தவரை அவர்களின் முன்னகர்வை மிகவும் தாமதப்படுத்திவிடக் கூடிய அம்சம் அது. எழுதிப் பயின்று உரையாடியே இலக்கியம் முன்னகர முடியும். யாரும் யாரையும் தடுக்கவோ வரையறுக்கவோ முடியாது. எழுத்தின் மீதுள்ள குன்றாத ஆர்வமே ஒருவரை கவிஞராகவோ புனைகதை எழுத்தாளரோ ஆக்குகின்றது.
*
கவிஞர் நேதாமோகனின் இலை பெய்யும் காலம் என்ற கவிதைத் தொகுப்பு தாயதி பதிப்பக வெளியீடாக அண்மையில் வெளிவந்துள்ளது. 2015 இல் துணிச்சல்காரன் என்ற முதற் தொகுப்பு வெளியானது. நெடுந்தீவைச் சேர்ந்த இவரது பெயர் நெடுந்தீவு நேதாமோகன் என்றே பெயரிலேயே பரவலாக அறியப்பட்டிருந்தது.
*
இலை பெய்யும் காலம் என்னளவில் முக்கியமான தொகுப்பு, மேற் சொன்ன காலகட்டத்தின் தொடக்கத்தில் இவரது முதற் தொகுப்பு வந்திருந்தாலும் இலக்கிய மதிப்பீட்டில் இவருடைய எழுத்துகள் கவனத்தை உண்டாக்கவில்லை. ஆரம்ப நிலை கவிஞராகவே கருதப்பட்டார்.
நேதாமோகன் தன் மகனுடன்
இலை பெய்யும் காலம் தொகுப்பில் அவரது வளர்ச்சியை கவனித்து உரையாடியே ஆக வேண்டிய இடத்திற்கு நகர்ந்திருக்கிறார். கவிதையில் தாகத்தோடும் எழுதும் ஓர்மத்தோடும் தொடர்ந்து முன் சென்றால் நேதாவால் தனக்கான இலக்கிய இடத்தினை உருவாக்கிக் கொள்ள முடியும். இந்தத் தொகுப்பில் உள்ள சில வரிகள் அவரது மனம் கொள்ளும் விரிவை, கவிதை தன்னை மறந்து அவரில் நிகழ்வதை வெளிக்காட்டுகிறது.
ஒரு கவிதை இப்படித் தொடங்குகின்றது,
‘ இருளும் அமைதியும் நிறைந்த
பள்ளத்தாக்கில் இருந்து கத்துகிறேன்
ஒரே ஒரு வெளிச்சத்தின் துளிக்காக..
தொடர்ந்து அவ்விருளில் நிகழும் காட்சிகளை விபரித்தபடி சென்று இறுதி வரிகளில் சொற்கள் இப்படிக் கவிதையாகின்றன.
‘ ஓர் ஒளிமுகத்தின் தீச்சுடர்
இருவிழிகளில் கிரகணம் அள்ளி
எப்போதும் வரும் என் இருட் குகைக்குள்’.
ஒரு கவிதை காய்ந்த சருகுக் குவியலிலிருந்து முதற் புகையென எழுந்து மேகம் வரை நீளும் கனவு போல் ஆக வேண்டும். அதன் விரிவே அதன் மதிப்பை உருவாக்குவது. இத்தகைய விரிவு கொள்ளும் வரிகளினாலேயே அவரது கவிதை மனம் நம்மைத் தொடுகின்றது.
இன்னொரு அம்சம் கவிதைக்குள் நிகழும் கதை. கதையைக் கவிதை எதிர்கொண்டு கவித்துவத்தை அடையும் தருணத்தினால் அதை எரியும் சோகமாகவோ அல்லது உதட்டில் அலைபுரளும் புன்னகையாகவோ மாற்றும். மழை நாள் என்றொரு கவிதை,
நேற்று முளைத்த செடி
ஒன்றிற்குப் புயலை எதிர்க்க
கற்றுக்கொடுக்கிறது தாய்மரம்
புற்றுக்குள் இருந்து
ஒரு தொகை மண்ணை வெளியேற்றி
அவசரமாக இடம் மாறுகின்றது எறும்புக்கூட்டம்
வேலைக்குச் செல்லும் கணவனை
புயலையும் தீராத மழையையும் காரணம் காட்டி
காதலிக்க அழைக்கிறாள் மனைவி
மின்சாரத் தடங்கலுக்காக
அடிக்கடி சினந்து கொள்கிறான் மகன்
என் நண்பன் தொலைபேசியில் அழைத்து
இந்த அடைமழைக்கு
தேநீரும் சிகரெட்டும்
குடித்தால் நன்றாய் இ
ருக்கும்
என்று நலம் விசாரிக்கிறான்
நானோ
அம்மா சிறுமியாக இருக்கும் போது
அடித்த புயல்பற்றிய கதையினை
ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
இக்கவிதையின் இறுதி வரிகளுக்கு வந்து சேரும் போது புயல் ஒரு புன்னகையென இதழில் அடிக்கிறது.
இத்தகைய கதையம்சங்கள் கொண்ட கவிதைகளில் அவருடைய அவதானிப்புகள் வளர்ச்சியடைந்திருக்கிறது.
அரிக்கன்லாம்பு எனும் கவிதையும் இத்தகைய கதைத்தன்மை கொண்டது. அரிக்கன் லாம்புக்காலங்களைக் கடந்து விட்ட பின்னரும் அந்த வெளிச்சம் விரட்டாத இருள் இன்றும் எம்முடன் வாழ்கிறது என்று தொடங்கும் அந்தக் கவிதை
‘ இருளின்மேல் ஒளியாய்
எழுந்த லாம்பு
நம் வாழ்க்கைச்சுழற்சியின் சூரியன்’ என்று தன் கவித்துவ கணங்களைச் சென்று சேர்கிறது. அரிக்கன்லாம்பிலிருந்து எழும் ஒளியை சூரியனாகக் காணும் கண்களிற்கு கவிதை இன்னும் உதிக்கும்.
வெட்டியான் எனும் இன்னொரு கவிதையின் இறுதி வரிகளில்,
‘ கண் நனைத்தபடியே ஒருவருக்குச் சொன்னான்
என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கூட
நான் சவக்கிடங்கு தோண்டியிருக்கலாம்
ஒவ்வொரு புதைகுழிக்குள்ளும் என் ஆத்மாவையும்
கண்ணீரையும் அவர்களுக்குத் துணையாய்
போட்டு மூடிவிடுகின்றேன்’
இந்தக் கவிதை வரிகளுக்கு ஒருவர் சென்று சேர அதற்கான அனுபவம் வாய்க்க ஒரு வாழ்க்கை இருக்க வேண்டும். நேதாவின் கண்கள் வாழ்வை உள்ளும் புறமும் பார்க்க ஆரம்பித்துவிட்ட மகிழ்ச்சியை இத் தொகுப்பு அளிக்கிறது. நமது சூழலில் கவனிக்கப்பட்டு உரையாடி வளர்த்தெடுக்கப்பட வேண்டிய கவிதைக்குரலை அவர் கொண்டிருக்கிறார். இத் தொகுப்பில் உள்ள அரசியல் கவிதைகளும் கவனிக்கத்தக்கவை. குமுதினி மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பில் எழுதப்பட்டுள்ளவற்றில் உள்ளோடும் அவதானிப்புகளும் சித்தரிப்புகளும் முக்கியமானவை.