அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசின் கடும் நடவடிக்கைகளால் 2025 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியமான, மறக்க முடியாத ஆண்டாகப் பதியப்பட்டுள்ளது. இதுவரை காணாத வகையில் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கிய அரசியல், நிர்வாக மற்றும் உயர் மட்டத் தலைமைகள் கைது செய்யப்பட்டதுடன், பலர் சிறைவாசத்துக்கும் அனுப்பப்பட்டமை நாட்டளவில் பெரும் அதிர்வலை ஒன்றை உருவாக்கியது.
அநுர அரசின் ஊழல் ஒழிப்பு முயற்சிகளின் தொடர்ச்சியாக, 2025 ஆம் ஆண்டு முழுவதும் இடம்பெற்ற இந்த முக்கிய கைது சம்பவங்கள் மாதந்தோறும் பதிவாகி, இலங்கை அரசியலை ஆழமாக உலுக்கிய முக்கிய நிகழ்வுகளாக மாறியுள்ளன.
2025 ஜனவரி மாதம்
யோஷித ராஜபக்ச (நிதி முறைகேடு குற்றச்சாட்டு),
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா (சட்டவிரோத வாகனம் வைத்திருந்தமை),
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா (அரச நிதி முறைகேடு),
உதயங்க வீரதுங்க (தாக்குதல் குற்றச்சாட்டு),
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
2025 பெப்ரவரி மாதம்
சாந்த அபேசேகர (சட்டவிரோத வாகனம் வைத்திருந்தமை),
குலசிங்கம் திலீபன் (போலி முகவரிச் சான்றுகள் மூலம் இந்தியக் கடவுச்சீட்டை பெற்றமை) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
2025 மார்ச் மாதம்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் (துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது),
சாமர சம்பத் தசநாயக்க (நிதி முறைகேடு குற்றச்சாட்டு) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
2025 ஏப்ரல் மாதம்
கடந்தகால மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டார்.
2025 மே மாதம்
கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ரமித்த ரம்புக்வெல்ல (அரச நிதி முறைகேடுகள்) கைது செய்யப்பட்டதுடன்,
மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும்,
நளின் பெர்னாண்டோவிற்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
2025 ஜூன் மாதம்
கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது குடும்ப உறுப்பினர்களும் ஜூன் மாதத்தில் கைது செய்யப்பட்டனர்.
2025 ஜூலை மாதம்
சோள விதைகளை முறையற்ற வகையில் விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ் எஸ். எம். சந்திரசேன கைது செய்யப்பட்டார்.
2025 ஓகஸ்ட் மாதம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (அரச நிதி முறைகேடு குற்றச்சாட்டு) கைது செய்யப்பட்டமை இலங்கையிலும் சர்வதேச அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே மாதத்தில் ஷசீந்திர ராஜபக்ச (ஊழல் குற்றச்சாட்டு),
ராஜித சேனாரத்ன (மணல் அகழ்வு ஊழல்),
நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
2025 நவம்பர் மாதம்
ஜயம்பதி சரித ரத்வத்த (ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம்),
நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
2025 டிசம்பர் மாதம்
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (பொலிஸாரின் கடமைக்கு இடையூறு),
டக்ளஸ் தேவானந்தா (பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷிடம் இருந்து துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்) கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு 2025 ஆம் ஆண்டு முழுவதும் இடம்பெற்ற தொடர் கைது நடவடிக்கைகள் இலங்கை அரசியலை உலுக்கிய முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. ஊழலில் சிக்கிய பல அரசியல் தலைமைகளின் எதிர்காலம் குறித்து வரும் ஆண்டுகளில் காலமே இறுதி தீர்ப்பை வழங்கும் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.