‘சிங்கப்பூர், சிங்கப்பூர் என்று புலம்பிக்கொண்டிருக்காமல் சிங்கப்பூரைபோல் முன்னேற முயற்சிக்க வேண்டும்’ என்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டெனிஸ் சல்ஹி தெரிவித்துள்ளார்.
ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கையைப் புதிய சிங்கப்பூராக மாற்றுவது பற்றிப் பேசப்படுகின்றது. சிங்கப்பூரில் லீ குவான் யூ என்ற மனிதரை விட்டு அங்கு வாழும் மக்களைப் பாருங்கள். மலே இனத்தவர்கள், இந்தியர்கள், சீனர்கள் எல்லோரும் தனித்தனி அடையாளங்களைக் கொண்டவர்கள்.
அவர்கள் சிங்கப்பூரை முன்னேற்றுவதற்காக ஒன்றிணைந்து செயற்படுகின்றனர். அதை இலங்கை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆறு மாதங்களுக்கொரு தடவை சட்டங்களை மாற்றிக்கொண்டிருந்தால் முதலீட்டாளர்கள் எவரும் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள். முதலீடு செய்வதாக இருந்தால் உறுதியான, நிலையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
முதலீட்டாளர்கள் டொலரில் முதலீடு செய்தால் அவர்களுக்குரிய இலாபப்பங்கு டொலரிலேயே வழங்கப்பட வேண்டும் என்றும் டெனிஸ் குறிப்பிட்டுள்ளார்.