எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகிறது.
இந்த ஜனாதிபதி தேர்தலில் அஞ்சல் மூலமாக வாக்களிக்க 7,12,319 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கமைய, நேற்று (செப் 04) தொடங்கிய அஞ்சல் மூல வாக்களிப்பு, மூன்று நாட்கள் தொடர்ந்து நாளைவரை நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாளான இன்று, முப்படை முகாம்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் வாக்களிக்கவற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், நாளை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், சிரேஷ்ட உதவி காவல்துறை அத்தியட்சகர், உதவி காவல்துறை அத்தியட்சகர், காவல்துறை நிலையங்கள், விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட காவல்துறை பிரிவுகள் ஆகிய இடங்களிலும் வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.
அஞ்சல் மூல வாக்களிப்பு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதற்காக பணியிடங்களில் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கும், அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
அஞ்சல் மூல வாக்களிப்பில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில் வாக்களிக்க விரும்புவோர் தங்களின் மாவட்ட செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள விசேட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க வேண்டும்.
அதேவேளை, அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கச் செல்லும் போது, அஞ்சல் மூல வாக்குகளை கண்காணிக்கும் அதிகாரியினால் நியமிக்கப்பட்ட அதிகாரி, வாக்காளரின் அடையாளத்தை சரிபார்க்கும் நடவடிக்கையை மேற்கொள்வார்.
இல்லையெனில், அலுவலக அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிப்பதற்கான அனுமதி வழங்க வேண்டாம் என, தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அஞ்சல் மூல வாக்கு நிலையங்களுக்கும், வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் இடங்களுக்கும் விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.