இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை இன்று (23.12) இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக பேசப்பட்டது.

அனர்த்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளச் சீரமைப்பதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், தொடர்ந்தும் வழங்கவுள்ள ஆதரவையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இச்சந்திப்பில் வலியுறுத்தினார்.
குறிப்பாக, மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகளின் மீளமைப்பு மற்றும் சமூக பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் உறுதியான பங்களிப்பு தொடரும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பு, அனர்த்தத்திற்குப் பின்னரான இலங்கையின் மீள்கட்டுமானப் பயணத்தில் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தரப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல்களையும் பரஸ்பர புரிதலையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இச்சந்திப்பின் போது,13 ஆம் திருத்தம் தொடர்பான விடயங்களையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்ததுடன்மேலும், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. பலாலி ஓடுதளம் தொடர்பாக, தற்போதுள்ள கட்டமைப்பிலேயே அதைப் புனரமைக்க போதுமான வாய்ப்புகள் உள்ள நிலையில், மேலதிக காணிகளைப் பெற வேண்டிய எந்த அவசியமும் இல்லை.எனவே பலாலி ஓடுதளத்தை உடனடியாக புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இச்சந்திப்பில் பங்கேற்ற அனைவரும் வலியுறுத்தியதாக தெரிகின்றது
இந்த சந்திப்பில் எம். ஏ. சுமந்திரன், சிறீதரன், சீ.வி. கே. சிவஞானம், சித்தார்த்தன், சாணக்கியன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.