அரசாங்க ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதில் சிறிலங்கா அரசாங்கம் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் அரசாங்க நலன்புரி உதவித் திட்டக் கொடுப்பனவுகள் தாமதமாகலாம் என்று அரச உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இதனை செய்தியாளர் சந்திப்பில் ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு பொருளாதாரம் வெகுவாகச் சரிந்ததால், அரசாங்கம் கடும் வருமான இழப்பைச் சந்தித்திருக்கின்றது என்று அவர் கூறினார்.
அரச தகவல் திணைக்களத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் வருமானங்களை இழந்துள்ள அரசாங்கம், அரசாங்க ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கான நிதியைப் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்த மாதம் நிதிப் பற்றாக்குறை காரணமாக சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவது ஓரிரு வாரங்கள் தாமதமாகலாம் என்று கூறிய அவர், எவ்வாறாயினும் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும், தாமதத்தைப் பெறுநர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பணத்தை அச்சிட முடியாது. பணத்தை அச்சிட்டால் பணவீக்கம் மீண்டும் வேகமாக அதிகரிக்கும் என்று குறிப்பிட்ட அவர், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகள் காரணமாக நாடு பணத்தை அச்சிடுவதிலும் தடைகளை எதிர்நோக்கியுள்ளது என்று தெரிவித்தார்.