யாழ்ப்பாணம் மாவட்டத்தின் திண்மக் கழிவு அகற்றல், வளிமாசு கட்டுப்பாடு, பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கி பயன்பாடு போன்ற விடயங்கள் தொடர்பாக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
நேற்று (பெப் 06) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதனை அடுத்து இன்று (பெப் 07) மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, அவர் கூறியதாவது:
ஆலயங்கள் மற்றும் பிற நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து தொடர்ந்து முறைப்பாடுகள் வந்துகொண்டிருக்கின்றன. சமய நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும்போது, அருகிலுள்ள பொதுமக்கள், மாணவர்கள், மற்றும் முதியவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு கவனிக்க வேண்டும்.
மேலும், சில இடங்களில் ஆலயங்களிலிருந்து வெகுதூரம் உள்ள பகுதிகளில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு அதிக ஒலி எழுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் செயல்படுமாறு ஆலய நிர்வாகத்தினரையும் தர்மகர்த்தாக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
இது குறிப்பாக இரவு நேரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அதிக பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. எனவே, இதனை கட்டுப்படுத்த நாம் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.
ஒலிபெருக்கிகளுக்கான decibel அளவை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் மற்றும் சட்டங்கள் உள்ளன. இதை அமல்படுத்துவதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளது. எனவே, பொலிஸாருக்கு இது குறித்து எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளோம்.
பொதுமக்கள், அசௌகரியங்கள் ஏற்பட்டால், தங்களது முறைப்பாடுகளை பிரதேச செயலகத்திற்கு தெரிவிக்கலாம். இதன் மூலம், பிரதேச செயலர்கள் அவற்றை உடனடியாக பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்து, தேவையான கட்டுப்பாடுகளை மேற்கொள்வார்கள்.
எனவே, ஒலிபெருக்கிகள் பயன்பாட்டால் பிறருக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது அனைவருக்கும் ஏற்ற ஒரு சூழல் உருவாக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.