அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் தொடக்க முயற்சியாக ‘GovPay’ வசதி அறிமுகப்படுத்தப்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்வு இன்று (பெப் 07) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற உள்ளது.
பாதுகாப்பான மற்றும் செயல்திறன் வாய்ந்த டிஜிட்டல் முறையின் மூலம் தடையின்றி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளGovPay பயன்படுத்த முடியும். இது அரச நிறுவனங்களுடனான பணப்பரிவர்த்தனைகளை சீரமைத்து, அவற்றை நவீனமயமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அரச வருமான சேகரிப்பில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் இத்திட்டம், தரவின் அடிப்படையில் முடிவெடுக்க உதவுவதோடு, மேலும் திறமையான மற்றும் குடிமக்களுக்கு ஏற்ற அரச சேவை வழங்கலுக்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தனது கருத்தில்,
“தற்போது, இந்த கட்டண வசதி 16 அரச சேவைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்குள், மேலும் 30 சேவைகளுக்கு இது விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். அத்துடன், எதிர்காலத்தில் இந்த முறை மூலம் பணம் செலுத்துவதற்கான செலவை 15 ரூபாய் வரை குறைக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.