இன்று (ஒக்டோபர் 10) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்ற நிகழ்வில், மூன்று புதிய அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.
புதிய அமைச்சரவை மாற்றத்தின்படி, இரண்டு அமைச்சர்களின் பொறுப்புகளும் ஒரு பிரதி அமைச்சரின் பொறுப்பும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பதவி வகித்த பிமல் ரத்நாயக்கவிடம் இருந்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சுப் பொறுப்பு நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக நகர அபிவிருத்தி அமைச்சு இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிமல் ரத்நாயக்க இன்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராகப் பதவியேற்றார்.
அவரிடமிருந்து நீக்கப்பட்ட சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சுப் பொறுப்பு அனுர கருணாதிலகவிடம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சராகப் பணியாற்றிய அவர், இன்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பதவியேற்றார்.
மேலும், அனுர கருணாதிலகவிடமிருந்து நீக்கப்பட்ட நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சுப் பொறுப்பு, முன்னர் காணி மற்றும் நீர்ப்பாசனப் பிரதி அமைச்சராக இருந்த வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் இன்று வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராகப் பதவியேற்றார்.
அத்துடன், முன்பதாக எந்த அமைச்சுப் பொறுப்பையும் வகிக்காத கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, தினிந்து சமன் குமார, நிஷாந்த ஜயவீர மற்றும் எம். எம். ஐ. அர்கம் ஆகியோர் புதிய பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பதவியேற்ற அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பட்டியல் பின்வருமாறு:
அமைச்சரவை அமைச்சர்கள்:
01. பிமல் நிரோஷன் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்
02. அனுர கருணாதிலக – துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்
03. வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்க – வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்
பிரதி அமைச்சர்கள்:
01. கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ – நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்
02. டி. பி. சரத் – வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்
03. எம். எம். மொஹமட் முனீர் – சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர்
04. எரங்க குணசேகர – நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்
05. வைத்தியர் முதித ஹங்சக விஜயமுனி – சுகாதார பிரதி அமைச்சர்
06. அரவிந்த செனரத் விதாரண – காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்
07. எச். எம். தினிந்து சமன் குமார – இளைஞர் விவகார பிரதி அமைச்சர்
08. யு. டி. நிஷாந்த ஜயவீர – பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்
09. கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன – வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்
10. எம். எம். ஐ. அர்கம் – வலுசக்தி பிரதி அமைச்சர்