சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவர் திருந்தி வாழ சந்தர்ப்பமொன்றை வழங்குமாறு யாழ் மாவட்ட சர்வமத பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் நாக விகாரையில் புதன்கிழமை (23/09) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது சர்வமத தலைவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
சவூதி அரேபிய நீதித்துறையின் கட்டமைப்பை தாம் மதிப்பதாகத் தெரிவித்த அவர்கள், கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைத்து கருணை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
முஹம்மது நபி தொடர்பில் சமூக ஊடகத்தில் அவதூறான கருத்தைப் பதிவிட்டமை தவறான செயல் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், இவ்வாறான பொறுப்பற்ற சமூக ஊடகப் பதிவுகள் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது என்றும் சர்வமத தலைவர்கள் தெரிவித்தனர்.
தமது மதத்தைப் பின்பற்றுவதுடன் ஏனைய மதங்களையும் மதிப்பதே முறையான ஆன்மிக அணுகுமுறை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அனோஜன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நீதிமன்றத்தினால் ஆரம்பத்தில் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டதாகவும், பின்னர் இடம்பெற்ற மேன்முறையீட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தாம் அறிந்துள்ளதாகவும் பேரவை தெரிவித்தது.
அனோஜனின் உயிரைக் காப்பாற்றுமாறு ஏற்கனவே பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களையும் தாம் மீண்டும் வலியுறுத்துவதாக சர்வமத தலைவர்கள் தெரிவித்தனர்.
சவூதி அரேபிய நீதித்துறையை மதிக்கும் அதேவேளை, அனோஜனை மன்னித்து அவர் திருந்தி வாழ மற்றுமொரு சந்தர்ப்பத்தை வழங்குமாறு யாழ் மாவட்ட சர்வமத பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.