இலங்கை முதலீட்டுச் சபை, ஊழியர்களுக்கு போனஸ் உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளை வழங்கும் போது, திறைசேரியின் அனுமதியின்றி பணம் செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2022ஆம் ஆண்டு தொடர்பான தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த ஆண்டில், திறைசேரியின் அனுமதியின்றி ஊழியர்களுக்கான போனஸ் உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளுக்காக இலங்கை முதலீட்டுச் சபை சுமார் 61 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
போனஸ் கொடுப்பனவுகளுக்காக சுமார் 07 கோடி ரூபாயும், ஏனைய கொடுப்பனவுகளுக்காக 54 கோடி ரூபாவிற்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பில், திறைசேரியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக முதலீட்டுச் சபையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த ஆண்டில், நிதி இராஜாங்க அமைச்சர், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் இடம்பெற்றபோது, கொடுப்பனவுகள் மற்றும் ஊழியர்களுக்கான பிரதிபலன்கள் தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.