அனர்த்தம் பாதித்த கண்டி மாவட்டத்துக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கள விஜயம் — மண்சரிவில் காணாமல் போன 35 பேரில் 22 சடலங்கள் மீட்பு

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளை பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (டிசம்பர்02) கண்டி மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர். மாவட்டத்தின் பல பகுதிகளுக்குச் சென்ற அவர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடன் சந்தித்து நிலைமைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர்.

கம்பளை மாவத்துற பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு இடத்துக்கும் அவர்கள் சென்று பார்வையிட்டனர். அந்த நிலச்சரிவில் முதலில் காணாமல் போனதாக கூறப்பட்ட 35 பேரில் இதுவரை 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள கம்பளை கணபதி தோட்ட மக்களையும் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், சாணக்கியன் இராசமாணிக்கம், திலித் ஜயவீர மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். கண்டி மாவட்ட முன்னாள் எம்.பி திலும் அமுனுகமவும் இந்தப் பயணத்தில் கலந்து கொண்டார்.

முகாமில் தங்கியுள்ள மக்கள் தாம் எதிர்கொண்டுள்ள கடும் நெருக்கடி நிலை குறித்து தெரிவித்து, எதிர்காலத்திலும் தங்கள் வீடுகள் மீண்டும் இயற்கை அனர்த்தங்களுக்குள் சிக்கக்கூடும் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தினர்.

பொதுமக்களிடம் உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோ கணேசன்,
“அரசாங்கத்துடன் ஆலோசித்து புதிய காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறோம். இந்தியாவுடனும் இதுகுறித்து பேசுவோம். காணிகள் கிடைத்தவுடன் நீங்கள் உங்கள் வீடுகளை மீண்டும் கட்டிக்கொள்ளலாம். நாங்கள் அரசு அல்ல; இருப்பினும் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்கிறோம். அபாயகரமான இடங்களுக்கு மக்கள் திரும்பச் செல்வது பாதுகாப்பற்றது; ஆகையால் புதிய காணி வழங்குவதற்காக தொடர்ந்து முயற்சி மேற்கொள்வோம்,” எனத் தெரிவித்தார்.

இந்த களவிழயம் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தனது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவிட்டதாவது:

“எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டி மாவட்டத்துக்கு கள விஜயம் செய்தோம். அண்மைய கடும் காலநிலை காரணமாக இம்மாவட்டம் மிகவும் சேதமடைந்துள்ளது. நிவாரண நடவடிக்கைகளில் பங்கேற்று, பொறுப்புடைய அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்தோம்.

மாவத்துற, இஹலகம, கம்பளை போன்ற பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 35 பேர் காணாமல் போயிருப்பதாக கூறப்படும் நிலையில் இதுவரை 22 பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்கு போதிய அரச உதவி இல்லை எனவும், அதன் காரணமாக தனது சொந்த செலவிலும் இயந்திரங்களையும் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும், இதுவரை அரச அதிகாரிகள் கூட பார்வையிடாத சில பாதிக்கப்பட்ட பகுதிகள் இன்னும் உள்ளன,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Article