குருநாகல் – குளியாபிட்டி வீதியில் நேற்று (18/03) சோகம் கலந்த அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
அதிவேகமாக வந்த நோயாளர் காவு வண்டியும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒரு உயிர் பறிபோயுள்ளது.
குருநாகலில் இருந்து குளியாபிட்டி நோக்கிச் சென்ற நோயாளர் காவு வண்டி, லபுயாய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் பயங்கரமாக மோதியது.
முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முச்சக்கர வண்டியில் இருந்த மேலும் இருவர் பலத்த காயங்களுடன் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மோதிய வேகத்தில் முச்சக்கர வண்டி அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்துள்ளது.
விபத்து தொடர்பாக நோயாளர் காவு வண்டியின் சாரதி குளியாபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உயிரைக் காக்கச் செல்லும் வாகனமே ஒரு உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.