அடையாள அட்டை அல்லது நகல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபரின் டிஜிட்டல் புகைப்படம் எடுக்க பதிவு செய்த புகைப்படக் கலைஞரால் விதிக்கப்படும் அதிகபட்ச கட்டணம் 400 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த விலை இரத்துச் செய்யப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.
இதற்கு முன்பு இந்த சேவைகளுக்காக அதிகபட்சமாக 150 ரூபா அறவிடப்பட்டது. ஒரு அடையாள அட்டை அல்லது அடையாள அட்டையின் நகலைப் பெறுவதில், விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்லைன் அமைப்பு மூலம் ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு அனுப்ப வேண்டும்.
இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அதன் கீழ், புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கவும், பின்னர் படிப்படியாக ஒட்டுமொத்த சமூகத்திற்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கவும் அரசாங்கம் திட்ட மிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நாட்டில் தொழில்நுட்ப பற்றாக்குறையும் ஒரு காரணம் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.