சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, தனது சபாநாயகர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
ஒரு விசேட அறிக்கையை வெளியிட்டு அவர் இந்த முடிவை பகிர்ந்துள்ளார்.
அந்த அறிக்கையின் விவரம்:
கடந்த சில நாட்களில், எனது கல்வித் தகுதி குறித்து சமூகத்தில் கேள்விகள் எழுந்துள்ளன.
எனது கல்வித் தகுதி தொடர்பாக இதுவரை நான் எந்தவிதமான தவறான தகவல்களையும் வழங்கவில்லை.
ஆனால், கல்வித் தகுதியை உறுதிப்படுத்த தேவையான சில ஆவணங்கள் தற்போது என்னிடம் இல்லை. அவற்றை உரிய நிறுவனங்களில் இருந்து பெறுவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், அவற்றை விரைவாக சமர்ப்பிக்க முடியாமல் உள்ளேன்.
ஜப்பானில் உள்ள வஷிதா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனம் மூலம் எனது முனைவர் பட்டத்திற்கான ஆவணங்களை உறுதிப்படுத்த முடியும். விரைவில் அவற்றை சமர்ப்பிக்க நான் திட்டமிட்டுள்ளேன்.
எனினும், ஏற்பட்டுள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு, அரசாங்கத்திற்கும் என்னை நம்பும் மக்களுக்கும் ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக, நான் சபாநாயகர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்பதை அறிவிக்கிறேன்.