யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு ஹெரோய்ன் கொண்டு சென்ற குடும்பஸ்தர் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றில் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று(ஜூலை 12) இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச தலைமையிலான பொலிஸ் குழு வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்களும் சோதனையிடப்பட்டன.
பஸ் ஒன்று சோதனையிடப்பட்டபோது, அதில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவரின் பயணப் பொதியில் இருந்து ஒரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து யாழ்ப்பாணம், நாவற்குழியைச் சேர்ந்தவரும், வவுனியாவில் வசித்தவருமான அந்தக் குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டார்.
கண்டுபிடிக்கப்பட்ட ஹெரோயின் கலப்படமற்ற தூய ஹெரோய்ன் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.
இது தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் நடைபெற்றுவந்த நிலையில், சந்தேகநபர் பிணையில் செல்ல நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு, அரச சட்டத்தரணிகளான தர்சிகா திருக்குமாரன் மற்றும் ஆறுமுகம் தனுஸன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன.
வழக்கு விசாரணைகளில் சந்தேகநபர் தூய ஹெரோய்னை உடைமையில் வைத்திருந்தமை, விற்பனைக்காக எடுத்துச் சென்றமை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, 55 வயதான சந்தேகநபருக்கு நேற்று வவுனியா மேல் நீதிமன்றில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.