2025 ஆம் ஆண்டில் 340,000 இலங்கையர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு விளக்கமளிக்க தொடர் நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் முதலாவது நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய பணியகத் தலைவர் கோசல விக்ரமசிங்க இந்த தகவலை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பி. சேனாநாயக்க, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் மூலம் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாடு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.
2024 ஆம் ஆண்டில் சுமார் 314,000 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இதன் மூலம், 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்டதாக டி.டி.பி. சேனாநாயக்க தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில் வெளிநாடு சென்ற தொழிலாளர்களில் 65% பேர் தொழில்முறை வேலைகளுக்கும், 35% பேர் குறைந்தபட்ச தொழில்முறை வேலைகளுக்கும் சென்றுள்ளனர். 2025 ஆம் ஆண்டில், 75% தொழிலாளர்களை தொழில்முறை வேலைகளுக்கும், 25% தொழிலாளர்களை குறைந்தபட்ச தொழில்முறை வேலைகளுக்கும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, குவைத்துக்கு 84,000 பேர், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு 55,000 பேர், சவுதி அரேபியாவுக்கு 52,000 பேர் அனுப்பப்படுவார்கள்.
மேலும், பணியகத்தின் மூலம் நேரடியாக அனுப்பப்படும் வேலைவாய்ப்புகளாக, இஸ்ரேலுக்கு 15,900 பேர், ஜப்பானுக்கு 9,000 பேர், தென் கொரியாவுக்கு 8,000 பேர் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.