விசாரணைக்காகச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான 5 பொலிஸார் மன்னார் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மன்னார், உயிலங்குளத்தில் கடந்த 24 ஆம் திகதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அன்றைய தினம் மாலை உயிலங்குளம் மதுபானசாலை அருகே சிலர் குழப்பத்தில் ஈடுபடுகின்றனர் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் அங்கு விசாரணைக்காகச் சென்றுள்ளனர்.
அங்கு குழப்பத்தில் ஈடுபட்டவர்களை விசாரிக்க முற்பட்டபோது, அவர்களில் சிலர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த பொலிஸார் மன்னார் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்றுமுன்தினம் இரவு ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மேலும் 9 பேர் உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் நேற்றுச் சரணடைந்துள்ளனர்.
அவர்கள் மன்னார் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.