அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நாட்டின் தெரிவு செய்யப்பட்ட கரையோர மாவட்டங்களில் தேசிய சுனாமி ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (நவம்பர் 05) காலை 09.30 மணிக்கு பருத்தித்துறையில் அமைந்துள்ள வட இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த ஒத்திகையின் போது வெளியிடப்படும் தகவல்கள், அறிவித்தல்கள் மற்றும் எச்சரிக்கைகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அடிப்படையில் நடைபெறும் ஒத்திகைச் செயற்பாடுகளாக இருந்ததோடு இந்த ஒத்திகை நிகழ்வானது, உண்மையான சுனாமி எச்சரிக்கை நிலை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்புகள் மற்றும் பொது மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைப் பரிசோதித்து, தயார்நிலையை மேம்படுத்துவதை நோக்கமாக அமைந்திருந்தது.


இவ் ஒத்திகை நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் T. N. சூரியராஜா, உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, முப்படைகளின் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அனர்த்த முகாமைதுவ பிரிவு உத்தியோகத்தர்கள், பருத்தித்துறை பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள்,செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் ,அரச்சார்பற்ற நிறுவனத்தினர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.